பதிவு செய்த நாள்
28
நவ
2011
10:11
பழநி : பழநி கோயில் பஞ்சாமிர்தத்திற்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை நீடிக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்படும் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை ஆர்வமுடன் வாங்கி செல்வர். பஞ்சாமிர்தம் மலைக்கோயில், அடிவாரம், வின்ச்,ரோப்கார் ஸ்டேஷன்கள் உட்பட எட்டு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, தனியார் சிலரும் பஞ்சாமிர்தத்தை அடிவார பகுதியில் விற்கின்றனர். சில வாரங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று விடுமுறை தினமாக இருந்ததால், பக்தர்களின் வருகை அதிகரித்தது. காலை 10 மணிக்கே, கோயில் விற்பனை நிலையங்களில் பஞ்சாமிர்தம் விற்று தீர்ந்துவிட்டது. இரண்டு நாட்களாக பழநியில் செயற்கையாக ஏற்பட்டுள்ள பஞ்சாமிர்த தட்டுப்பாட்டால், பக்தர்கள் காலியான கடைகளை பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் சரத்:மலைக்கோயில் கடையில் பஞ்சாமிர்தம் கிடைக்கவில்லை. அடிவாரத்தில் வாங்கி கொள்ள அறிவுறுத்தினர். ஆனால், தனியார் கடைகளில் மட்டுமே பஞ்சாமிர்தம் தாராளமாக கிடைக்கிறது. கோயில் நைவேத்திய பிரசாதம் கிடைக்காததும், ஏமாற்றமாக உள்ளது. திருச்சி கணேசன்: தனியாரிடம் வாங்குவதை விட, பிரசாதமாக கோயில் தயாரிப்பையே வாங்கிச்செல்ல எண்ணினேன். ஆனால், கோயில் கடைகளில் பஞ்சாமிர்தம் கிடைக்காதது ஏமாற்றமாக உள்ளது. சீசன் நேரம் என்று தெரிந்தும், தேவையான அளவு உற்பத்தி செய்யாமல் கோயில் நிர்வாகம் இருந்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மழைக் காலமாக இருப்பதால், அதிக பஞ்சாமிர்த டின்களை இருப்பில் வைக்க முடியவில்லை. தட்டுப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். செயற்கையான தட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவது நீடிக்கிறது.