பதிவு செய்த நாள்
28
நவ
2011
12:11
ஓசூர் : ஓசூரில் உள்ள, 1,500 ஆண்டு பழமையான சந்திரசூடேஸ்வரர் கோவிலில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு நிலை கொண்ட புதிய ராஜகோபுரம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. தமிழக, கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள ஓசூரில் மலைமீது அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த கோவில், 1,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மலைமீது சிவன் கோவில் அமைந்திருப்பது அபூர்வமானது. ஓசூரில் மலை மீது சந்திரசூடேஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளதால், கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் குடும்பத்தோடு வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலில், 65 அடி உயரத்தில் பழமையான ராஜகோபுரம் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு சிறப்பு அளிக்கும் வகையில், கோவில் நுழைவு வாயிலில் புதிய ராஜகோபுரம் அமைக்கவும், சிதலமடைந்த பழைய ராஜகோபுரத்தை சீரமைக்கவும் பக்தர்கள் வலியுறுத்தனர். இதையடுத்து, இந்து அறநிலையத்துறை சார்பில் சிதலமடைந்த பழைய ராஜகோபுரத்தில் விரிசல் விட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டது. சந்திரசூடேஸ்வரர் கோவிலை சிறந்த சுற்றுலா தலமாக்க கோவில் நுழைவாயில் பகுதியில் புதிய ராஜகோபுரம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 107 அடி உயரத்தில், ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கு முன் வந்தது. கடந்த இரு ஆண்டாக புதிய ராஜகோபுரம் வரைப்படம் தயாரிக்கப்பட்டு, இந்து அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி மூலம் கோபுரம் கட்டும் இடம் பார்வையிடப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டது. இந்நிலையில், நேற்று புதிய ராஜகோபுரம் கட்டுவதற்காக பூமி பூஜை விழா நடந்தது. நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, முன்னாள் நகராட்சி தலைவர்(பொ) மாதேஸ்வரன், ஒன்றிய அ.தி.மு.க., பொருளாளர் சிட்டிஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை துவக்கி வைத்தனர். தலைமை ஸ்தபதி, கோவில் பூசாரிகள் நவதானியங்கள், பழங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜை பொருட்களை வைத்து பூஜை செய்தனர். கோவில் நுழைவு வாயில் பகுதியில் ஆகம விதிமுறைப்படி, கோபுரம் அமையும் இடத்தில் உள்ள தூண்களை இடிப்பதற்கான பணியை முறைப்படி துவக்கினார். முக்கிய பிரமுகர் ராமச்சந்திரப்பா, கவுன்சிலர்கள் வாசுதேவன், நந்தகுமார், நாகராஜ், ரோஜா பாண்டியன், ராஜகோபுரம் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிய ராஜகோபுரம் கட்டுமான பணியோடு கிரிவல பாதையும், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், சந்திரசூடேஸ்வரர் கோõவில் சிறந்த சுற்றுலா தலமாக மாற வாய்ப்புள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.