பதிவு செய்த நாள்
24
ஆக
2017
11:08
வில்லியனுார்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மரவள்ளி கிழங்கு மாவு, களிமண் மற்றும் காகித கூழ் போன்றவற்றை கொண்டு, பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா, வரும் ௨௫ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்படும். இதற்காக, பல்வேறு இடங்களில், 6 இன்ச் முதல் 25 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலைகள் ரூ.30 முதல் 30 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளன.
இந்தாண்டு பாகுபலி விநாயகர், சிவசக்தி கணபதி, மயில்வாகன விநாயகர், காமதேனு கற்பபக விநாயகர், தாமரை விநாயகர், நந்தி விநாயகர், ரிஷப விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், விவசாய விநாயகர், அனந்த சயன விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிக்கப்படுகின்றன. சுற்றுசூழலை பாதிக்காத வகையில் காகித கூழால் ஆன கலவையால், இச் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப களிமண் அல்லது காகித கூழால் ஆன விநாயகர் சிலைகள் தயாரித்து அனுப்பப் படுகின்றன.
வில்லியனுார் கணுவாப்பேட்டையை சேர்ந்த சேகர், 40 ஆண்டுகளாக டெரக்கோட்டா பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது டெரகோட்டா மையத்தில் சேலம் மற்றும் பண்ருட்டி பகுதியில் கிடைக்கும் மரவள்ளி கிழங்கு மாவு, கல் நார் மற்றும் காகித கூழ் உள்ளிட்ட கலவைகளை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப் பட்டு வருகிறது. இங்கு தயாராகும் விநாயகர் உள்ளூர் மட்டுமின்றி, அமெரிக்கா, பிரான்ஸ், துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.