ஆவணி மூலத் திருவிழா: மதுரையில் சுந்தரேஸ்வரர் ஆட்சி தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2017 11:09
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆவணிமூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று இரவு சுவாமி பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. செங்கோலுடன் பட்டாபிஷேக அலங்காரத்தில் சுவாமி சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர்.
மதுரை ஆவணிமூலத் திருவிழாவில் நேற்று (31ம் தேதி) வெள்ளிக்கிழமை இரவு சுவாமி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் இரவு 7.04 மணிக்குள் மீன லக்னத்தில் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுவாமியிடமிருந்து கோயில் முக்கிய நிர்வாகி செங்கோலைப் பெற்று சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து மீண்டும் சுவாமியிடம் அளித்தனர். செங்கோலுடன் பட்டாபிஷேக அலங்காரத்தில் சுவாமி சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பட்டாபிஷேகத்திலிருந்து மதுரையில் சுவாமி ஆட்சி தொடங்குவதாக ஐதீகம். இன்று (செப் 1ம்) சனிக்கிழமை நரியை பரியாக்கிய லீலையும், 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முக்கிய நிகழ்வான புட்டுத்திருவிழாவும் நடைபெறுகிறது.