பதிவு செய்த நாள்
01
செப்
2017
11:09
சென்னை: சென்னையில், 1,330 விநாயகர் சிலைகள், நேற்று கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி கொண்டாடட்டத்தை முன்னிட்டு, சென்னையில், பல தெருக்களின் சந்திப்புகளில், இந்து அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால், 3 முதல், 13 அடி உயரம் வரை என, 3,000 விநாயகர் சிலைகள் பிரதிஸ்டை செய்யப்பட்டது.
வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை கடலில் கரைக்க, நீலாங்கரை பல்கலை நகர், பட்டினப்பாக்கம் சீனிவாச நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், எண்ணுார் ஆகிய ஐந்து இடங்களில், போலீசார் அனுமதியளித்தனர். ஏற்கனவே, ஜூலை, 27ல், பிரதிஸ்டை செய்யப்பட்ட, 867 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளன. நேற்று, 1,330 விநாயகர் சிலைகள், சென்னையில் முக்கிய சாலைகளில், ஊர்வலமாக எடுத்து சென்று, கடலில் கரைக்க, போலீசார் அனுமதியளித்தனர். இதற்காக, பிரச்னைக்குரிய பகுதிகளில், மத்திய குற்றப்பிரிவு, ஆயுதப்படை என, 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் நகர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.நேற்று பிற்பகலில், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், மாலையில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தால், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை போன்ற பிரதான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.