பதிவு செய்த நாள்
01
செப்
2017
11:09
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் அவிநாசிலிங்கேஸ்வரர் உட்பட பல சிவாலயங்களில், ஆவணி மூல பிட்டுத்திருவிழா நேற்று நடைபெற்றது. பாண்டிய மன்னன் ஹரிவர்த்தனின் ஆட்சியின் போது, பலத்த மழை பெய்து, வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணை உடைந்தது. அணை உடைப்பை சரி செய்ய, வீட்டுக்கு ஒருவர் வர வேண்டும் என்று, மன்னர் உத்தரவிட்டார். மதுரையில், பிட்டு விற்று வந்த, குழந்தை பாக்கியம் இல்லாத வள்ளியம்மை, சிறந்த சிவ பக்தை. தமது சார்பில் அணையை அடைக்க யாருமே இல்லையென்று, இறைவனிடம் வேண்டினார். தொடர்ந்து, வேலையாளாக மூதாட்டியிடம் வந்த சிவபெருமான், உடைப்பை சரி செய்ய, கூலியாக பிட்டு வாங்கி சாப்பிட்டார். பின், கரையை அடைக்காமல், மரத்தடியில் துõங்கிவிடுகிறார். இதனால் ஆவேசமடைந்த மன்னன், பிரம்பால், முதுகில் அடித்தார். இறைவனை அடித்ததால், மன்னர் உட்பட உலக உயிரினங்கள் அனைவருக்கும், ஒரே நேரத்தில் பிரம்படி விழுந்தது. அடி வாங்கிய இறைவன், ஒரு பிடி மண் எடுத்து , அணையை அடைத்தார்.
இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்றான, இத்திருவிழா, ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தில் நடந்ததால், அந்நாளில், ஆவணி மூல பிட்டு திருவிழாவாக, சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வாணிய செட்டியார் சமூகம் சார்பில், பிட்டுத்திருவிழா நேற்று நடந்தது. இரவு 7:00க்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து விசாலாட்சி அம்மனுடன் விஸ்வேஸ்வரசுவாமி, சிறப்பு அலங்காரத்தில், கோவிலில் அமைக்கப்பட்ட மண் அணை முன் எழுந்தருளினார். சிவாச்சார்யார்கள், பிட்டுக்கு மண் சுமந்த படல திருக்காட்சியை அரங்கேற்றினர். தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 10:00க்கு, கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரருக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை, 4:00க்கு சிறப்பு அபிஷேகமும், 6:00க்கு, சுவாமி திருவீதி உலா காட்சி நடந்தது.