பதிவு செய்த நாள்
01
செப்
2017
01:09
திருத்தணி: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் மற்றும் மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் ஆகிய கோவில்களில் நடத்தப்படும் சிறப்பு அபிஷேக டிக்கெட்டுகள், ஆன்-லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவில்களான திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், வாரந்தோறும், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பெண் பக்தர்கள் வந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அந்த மூன்று நாட்களில் ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மாதந்தோறும், அமாவாசை நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வர். இதுதவிர, தினமும், காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்காக, 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை ஒரு நாள் முன்னாடியே மத்துார் கோவிலுக்கு நேரில் வந்து பெற வேண்டியிருந்தது.
அதே போல், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், வாரத்தில் சனிக்கிழமை அன்று, காலை, 8:30 மணி முதல், காலை, 10:30 மணி வரை, மாந்தீஸ்வரர் பூஜை நடந்து வருகிறது. இதற்காக, கோவில் நிர்வாகம், 950 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளும் முன்கூட்டியே பக்தர்கள் திருவாலங்காட்டிற்கு நேரில் வந்து பெற்று செல்ல வேண்டியிருந்தது. பக்தர்கள் வசதி கருதி, மேற்கண்ட இரண்டு பூஜைகளும், நேற்று முதல், ஆன்-லைன் மூலம் டிக்கெட்டுகளை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து உள்ளது. மேற்கண்ட இரு பூஜைக்கான டிக்கெட்டுகள் பெறுவதற்கு, www.tiruthanigaimurugan.hrce.in என்ற இணையதள முகவரியில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இரண்டு ஆண்டுக்கு முன்பே, திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட்டுகள் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.