தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த குரு பரிகார தலமான வசிஷ்டேசுவரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா வெகு சிறப்பாக வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தஞ்சாவூர் அடுத்த திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேசுவரர் கோவில். இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குரு பகவான். இக்கோவிலில் இறைவன் தானாகத் தோன்றியதால் தான் தோன்றீசுவரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்ததால், இத்தல இறைவன் வசிஷ்டேசுவரர் என அழைக்கப்பட்டார். இங்கு கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதி வினை ஏற்பட்டு 24 நிமிஷங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகிறது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவன் கோவிலிலும் காண முடியாது. இதனால், பல வெளிநாடுகளில் வாழும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பரிகார ஹோமங்கள் செய்து குரு பகவானை வழிபட்டுச் செல்கின்றனர்.
இத்தகையை சிறப்பு மிக்க குரு பகவான் இன்று (செப்.2) காலை 9.32 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். விழாவில், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டன. மேலும், குரு பகவானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.இதில் ஆயிரத்திறக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர். குருபெயர்ச்சியையொட்டி வருகிற 8ம் தேதி லட்சார்ச்சனை நடக்கிறது. அதைத்தொடர்ந்து 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை 3 நாட்களுக்கு பரிகார ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.