பதிவு செய்த நாள்
02
செப்
2017
03:09
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த, படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள், 32 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, படவேடு கிராமத்தில் உள்ள ரோணுகாம்பாள் அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடக்கத்திலிருந்து, ஏழு வெள்ளிக்கிழமை ஆடித்திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினர். இந்த காணிக்கை, நேற்று உதவி ஆணையர் மோகனசுந்தரம் தலைமையில் எண்ணப்பட்டது. முடிவில், 32 லட்சத்து, 31ஆயிரத்து, 971 ரூபாய், 347 கிராம் தங்கம், 520 கிராம் வெள்ளி, ஆகிய வற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிந்தது. மேலும், அமெரிக்கா, கத்தார், ஆஸ்திரேலியா, மலேசியா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 22 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவை கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.