ஆந்திராவிற்கு யாத்திரை சென்ற காஞ்சிப்பெரியவர், சீடர்களோடு விறு விறுவென்று நடந்து கொண்டிருந்தார். முன் ஏற்பாடு எதுவும் கிடையாது. கிடைத்த இடங்களில் தங்கினார். எந்த இடத்தில் தங்கலாம் என உத்தரவு போடுகிறாரோ, அங்கு வசதி இல்லாவிட்டாலும் சீடர்கள் தங்கினர். சுவாமிகளின் வாழ்க்கை முறை எளியது. குளிப்பதற்கு குளம், படுப்பதற்கு கோயில் பிரகாரம் இருந்தால் போதும். அவரின் தேவை முடிந்து விடும். பக்தர்கள் தரும் பிட்சையை உணவாக ஏற்றுக் கொள்வார். அவ்வளவே அவர் வாழ்வு. ஒரு கிராமத்தின் பழமையான சிவன் கோயிலில் அவர் தங்கியிருந்த போது, உச்சிக்கால பூஜை அப்போது தான் முடிந்திருந்தது. சுவாமிகள் அங்கு வந்த பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பின் மண்டபத்தில் களைப்பு தீரப் படுத்து கொண்டார். சீடர்களும் படுத்தனர். அர்ச்சகருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. இவர்கள் உள்ளே இருப்பது தெரிந்தும், கோயில் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். இதற்குள் பெத்தச்ச தேவுடு (பெரிய மகான்) கோயிலுக்கு வந்து, உள்ளே தங்கியிருந்த சேதி ஊரெங்கும் பரவி விட்டது. ஏராளமானோர் கோயிலின் முன் திரண்டனர். கோயிலோ பூட்டியிருந்தது. அப்படியானால் கிடைத்த தகவல் தவறா? சுவாமிகள் சென்று விட்டாரா? மக்கள் குழப்பத்துடன் நின்றனர்.
கோயிலுக்கு வெளியே பேச்சு சத்தம் கேட்கவே, பெரியவர் எழுந்து விட்டார். ஜன்னல் வழியாக ஒரு சீடனை வெளியே பார்க்கச் சொன்னார். கோயில் பூட்டியிருப்பதையும், பக்தர்கள் தரிசிக்க கூடியிருப்பதையும் உணர்ந்து கொண்டார். அவர்கள் ஏமாற்றம் அடைவதை பெரியவர் விரும்பவில்லை. கதவைத் திறந்தாக வேண்டும். உள்ளே தான் இருப்பதை உணர்த்தி அவர்கள் திரும்பி போவதை தடுக்க வேண்டும். என்ன செய்வது? சீடன் ஒருவனை அழைத்து அங்கிருந்த கல் மீதேறி உயரே கட்டியிருந்த மணியை அடிக்கச் சொன்னார் சுவாமிகள். பெரியவரின் இந்த சமயோசித முடிவால், மக்கள் மணியோசை கேட்டனர். காவலாளி மாற்று சாவியோடு ஓடி வந்தார். கோயில் திறக்கப்பட்டது.பிறகென்ன! வந்த பக்தர்களை அன்போடு அமரச் செய்தார். அவர்களுக்கு அனுக்கிரகம் தந்து பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார்.