வத்தலக்குண்டு, வேடசந்தூர் கோயில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2017 12:09
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஓம் சக்தி கோஷங்களுடன் நடந்தது. நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 3 நாள் யாக பூஜைகளுடன் நடந்தது. கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் துவங்கின. கோ பூஜை, வனதேவதைகள் பூஜை, லட்சுமி பூஜைகள் நடந்தது. வாஸ்து சாந்தி, புண்யாவாசனம், பூர்ணாகுதி, ஆராதனைகள் நடந்தன. யாகசாலை வேள்விகள் நடந்தது. முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை ஓம் சக்தி கோஷங்கள் முழங்க புனித தீர்த்த குடங்கள் கோயிலைச் சுற்றி வந்தன. மேளதாளம், செண்டை மேளத்துடன் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. உறவின்முறை தலைவர் தயாளன், செயலாளர் பழனியப்பன், பொருளாளர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகம் மற்றும் விழாக்குழு உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருநாவுக்கரசு குருக்கள் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.
வேடசந்துார்: வேடசந்துார் அருகே நத்தப்பட்டி அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. தீர்த்தம் அழைத்தல், கணபதி பூஜையை தொடர்ந்து அங்காளம்மன் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில், நத்தப்பட்டி, குஞ்சுவீரன்பட்டி, விராலிப்பட்டியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூம்பூரில் அடிக்கல்: கூம்பூர் ஊராட்சி கணக்கப்பிள்ளையூரில் உள்ள பட்டாளம்மன் கோவில் சிறிய அளவில் இருந்ததால், இளைஞர்கள் தலைமையில் புதிய கோவில் கட்டுவதற்கான பணிகள் துவங்கின. நேற்று காலை பழைய கோயிலில் இருந்து பட்டாளம்மன் சுவாமி எடுத்து தனி அறையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பின் அடிக்கல் நாட்டும் பணி துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.