பதிவு செய்த நாள்
06
செப்
2017
01:09
காஞ்சிபுரம்: இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 95 கோவில்களில், 11.54 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,389 கோவில்கள், இந்து அறநிலையத் துறை பராமரிப்பில் இருக்கின்றன. இதில், நிர்வாக வசதிக்காக, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் உள்ள கோவில்கள், பட்டியல் சேராத கோவில்கள் எனவும் அதற்கு மேல் வருவாய் உள்ள கோவில்கள் பட்டியல் கோவில்கள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், பட்டியல் சேராத கோவில்கள் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் கண்காணிப்பிலும், மற்றவை இணை ஆணையர் கண்காணிப்பிலும் இருக்கிறது. கோவில்களில், சிலை, உண்டியல் திருட்டு போன்ற குற்ற செயல்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பாண்டு, மாவட்டத்தில், அறநிலையத் துறையின், 95 கோவில்களுக்கு, 11.54 லட்சம் ரூபாயில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தும் பணி நடக்கிறது.இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரிய கோவில்களில், ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிலைகள் உள்ள கோவில்களில் கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், கேமரா இல்லாத கோவில்களில் இந்த பணிகள் நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.