பதிவு செய்த நாள்
06
செப்
2017
04:09
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள ஈர்லுகுடில் கிராமத்தில், 11 ம் நூற்றாண்டை சேர்ந்த புலி குத்தப்பட்டான் நடுகல்லை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, அதன் தலைவர் கிருஷ்ணன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள ஈர்லுகுடில் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, புலி குத்தப்பட்டான் நடுகல்லை கண்டுபிடித்தோம். இது, 11 அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம். கல்வீடு போல் அமைக்கப்பட்டு, அதற்குள் வைக்கப்பட்டுள்ள இந்த நடுகல்லில், ஒரு வீரன் மற்றும் பெண் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
வீரன் வலதுபுற பக்கவாட்டில் திரும்பி நிற்பது போலவும், வலது கையில் வேலை வைத்து கொண்டு, பாய்ந்து வரும் புலியை தாக்குவது போலவும் காட்சிகள் உள்ளன. புலி தன், இரு பின்னங்கால்களால் நின்று கொண்டு, முன்பக்க, இரு கால்களுடன் வீரனை நோக்கி பாய்வது போலவும், வீரன் வேல் கொண்டு புலியின் கழுத்து பகுதியில் குத்துவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் வீரனின் பின்புறம், அவனது மனைவி வலது கையில் மதுகுடுவையுடன் நிற்கிறாள். இவர்கள் அணிந்துள்ள ஆடைகள் மற்றும் அணிகலன்கள் பற்றி தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆனால், வீரன் தனது தலைமுடியை இடதுபுற கொண்டையாகவும், அவரது மனைவி தன் தலைமுடியை வலதுபுற கொண்டையாகவும் வைத்துள்ளனர். பெரும்பாலான புலி குத்தப்பட்டான் நடுகற்கள், இடதுபுறத்தில் இருந்த புலிகள் தாக்குவது போல் தான் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த நடுகல்லில், வலதுபுறத்தில் இருந்து புலி தாக்குவது போல் உள்ளது. மேலும் வீரனின் கையில் வேல் தவிச் மற்ற எந்த ஆயுதங்களும் இல்லை. இதை வைத்து பார்க்கும் போது இந்த நடுகல், 11 அல்லது அதற்கு முந்தைய காலமாக இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.