பதிவு செய்த நாள்
01
டிச
2011
11:12
கோபிசெட்டிபாளையம் : கோபி பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் விநாயகர் திருத்தேர் வெள்ளோட்ட விழா, பாதுகாப்பு பெட்டக அறை திறப்பு விழா டிச., 4ம் தேதி நடக்கிறது. விழாவில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். கோபியில் பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள விநாயகருக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக தேர் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள பொருட்களை பாதுகாக்க, 7.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெட்டக வசதி செய்யப்பட்டுள்ளது. விநாயகர் திருத்தேர் வெள்ளோட்ட விழா மற்றும் பாதுகாப்பு பெட்டக அறை திறப்பு விழா டிச.,4 தேதி கோபியில் நடக்கிறது. திறப்பு விழாவை முன்னிட்டு டிச., 3 தேதி மாலை ஆறு மணிக்கு முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. டிச., 4 தேதி காலை ஏழு மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 10 மணிக்கு ரதப்பிரதிஷ்டை நடக்கிறது. மாலை நான்கு மணிக்கு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் முன் மண்டபத்தில் திருத்தேர் வெள்ளோட்ட விழா மற்றும் பாதுகாப்பு பெட்டக திறப்பு விழா நடக்கிறது. அறநிலையத் துறை இணை கமிஷனர் புகழேந்திரன் வரவேற்கிறார். திருப்பணிக்குழு உறுப்பினர் சண்முகம், திருப்பணி விளக்கம் குறித்து பேசுகிறார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகிக்கிறார். அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி, விநாயகர் திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கிறார். பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம், பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து வைக்கிறார். அறநிலைத்துறை கமிஷனர் சந்திரகுமார், கலெக்டர் சண்முகம், எம்.பி., சிவசாமி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாலை ஐந்து மணிக்கு பச்சைமலை பாலமுருகன் பக்தர்கள் குழு சார்பில் அன்னதானமும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை நடக்கிறது.