பதிவு செய்த நாள்
16
செப்
2017
12:09
வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டியில் 300 ஆண்டு பாரம்பரியத்துடன் ஊர் மந்தையில் ராஜகம்பளத்தாரின் திருமணம் மர இலை, தழை பந்தலில் நடந்தது. வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டி சீலமுத்து, வேலுத்தாயி மகன் முத்து, சாமிக்கண்ணு, செல்வி மகள் ரம்யா திருமணம், பாரம்பரிய முறையில் ஊர் மந்தையில் நடந்தது. காடுகளில் இருந்து பாலா மர இலைகளைக் கொண்டு மணப்பெண்ணிற்கான பந்தலை 12 ராசிகள் அடிப்படையில் 12 உசிலை மர குச்சிகளைக் கொண்டு அமைத்திருந்தனர். மாப்பிள்ளை, மணப்பெண்ணிக்கு சூரியன், சந்திரன் சாட்சிகளாக இரு கம்புகள் நடப்பட்டு தோரணவாயில் அமைக்கப்பட்டது. கம்பு, கருப்பட்டி, வெற்றிலை, பாக்கு அடங்கிய மண் சட்டிக்கு, இச்சமுதாயத்தில் திருமணங்கள் நடத்தும் தங்கவேலு பூஜை நடத்தினார். அவரைத் தொடர்ந்து மணமக்களும் பூஜை செய்தனர். இவை அனைத்தும் சமுதாய பெருமைகளை பாடல்களை பாடியபடியே நடந்தது.
சடங்கு முடிந்ததும் மாப்பிள்ளை குதிரையில் வலம் வந்தார். பின், அவரது தாய்மாமன் அவரை மணப்பெண்ணிடம் துாக்கிச் சென்றார். உறுமி முழங்க தாலி கட்டப்பட்டது. இளைஞர்கள் மணமக்களை உறுமி, தேவராட்டத்துடன் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். காலை 6:30 மணிக்கு துவங்கிய விழா, காலை 9:30 மணிக்கு முடிந்தது. ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.
மாங்கல்ய தத்துவம்: மணப்பெண்ணிற்காக மாப்பிள்ளை வீட்டார் தாலி செய்த பின், அதனை பெட்டிக்குள் வைக்க மாட்டார்கள். மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த பெண் கழுத்தில் அணிவார்கள். மறுநாள் திருமண நேரத்தில் அவரது கழுத்தில் இருந்து கழட்டி பூஜைகள் நடத்தி மணப்பெண்ணின் கழுத்தில் கட்டுவர். மாங்கல்யத்தை தரையில் வைக்கக்கூடாது என்ற தத்துவத்தால் அப்படி செய்வதாக மாப்பிள்ளையின் தாய்மாமன் விஜயன் கூறினார். சம்பந்திகளின் ’அத்தட்லுா’ தெலுங்கில் ’அத்தட்லுா’ என்றால் மரியாதை என்பதாகும். திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டாருக்கு, பெண் வீட்டார் மரியாதை செலுத்தும் வைபவம் நடக்கிறது. பெண் வீட்டார் உறுமி முழங்க தேவராட்டம் ஆடியபடி மரியாதை செலுத்த வருபவர்களை, மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வரும் பொருட்களை எடுக்க முயல்வதும், பெண் வீட்டார் தடுப்பதும், மாப்பிள்ளை வீட்டார் அசந்த நேரத்தில் அவர்களது மடியில் பெண் வீட்டார் கொட்டுவதும் என கேலி, கிண்டல்களுடன் பெண்கள் விளையாடினர்.
திருமணச் சடங்குகள் குறித்து மணப்பெண் ரம்யா கூறுகையில்,“ முன்பு இயற்கையைச் சார்ந்து வாழ்ந்தவர்கள் என்பதால் மரம், இலை, தழை, கம்பு, கருப்பட்டி என இயற்கை சார்ந்த பொருட்கள் திருமணத்தில் அதிகமாக இடம்பெறும். கடந்த காலத்தில் திருமணம் முடிந்து குழந்தை பெறுவது வரை ஊர் மந்தையில் நடந்ததாக பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். தொழில்நுட்பம் பெருகி விட்டதால் பாரம்பரியம் குறைந்து வருகிறது. திருமண நடைமுறைகளை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.