பதிவு செய்த நாள்
07
டிச
2011
12:12
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணைப்பிரச்னையால் நடந்து வரும் தொடர் போராட்டத்தால், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் பயணம் தடைபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு தமிழ்நாட்டில் இருந்து குமுளி வழியாக ஒரு பாதையும், செங்கோட்டை வழியாக ஒரு பாதையும் உள்ளது. இதில் குமுளி வழியாகவே அதிகமான பக்தர்கள் செல்வார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை விழா நடந்து கொண்டிருப்பதால், கார்த்திகை மாதம் துவக்கத்தில் இருந்தே தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வழக்கத்தை விட அதிகமான ஐயப்ப பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை பிரச்னையால், கேரளாவில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களையும் கேரளக்கும்பல் தாக்கி வருகின்றனர். அணைப்பகுதியில் அத்துமீறி நுழைந்து அணையை உடைக்கப்போவதாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேரள அரசின் அடாவடித்தனத்தை கண்டித்து, தமிழக எல்லைப்பகுதியான கம்பம், போடி, கூடலூரில் நேற்று முன்தினம் பொதுமக்கள் போராட்டத்தை துவக்கினர்.
தமிழகத்தில் இருந்து எந்த ஒரு வாகனத்தையும் கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கவில்லை. ஐயப்ப பக்தர்களின் வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஐயப்ப பக்தர்கள் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக சபரிமலைக்கு செல்ல முடியவில்லை. நேற்று முன்தினம் வந்த பக்தர்கள் செய்வதறியாது அந்தந்த பகுதியிலேயே தங்கினர். கூடலூர் வரை வந்த நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களை, கூடல் சுந்தரவேலவர் கோயில் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். நேற்றும் கூடலூரில் மறியல் தொடர்ந்ததால் வாகனப்போக்குவரத்து தடைபட்டுள்ளது. இன்னும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என பொதுமக்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடலூர் வரை வந்த பக்தர்கள் திரும்பி, மாற்றுப்பாதையான செங்கோட்டை வழியாக செல்லலாம் என திட்டமிட்டுள்ளனர். பல கி.மீ., தூரம் சுற்றி செங்கோட்டை வழியாக செல்லும் போது அங்கும் பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது என பக்தர்கள் புலம்பி வருகின்றனர். இதனால், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் பயணம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலைக்குச் செல்ல முடியாமல் கூடலூரில் தங்கியுள்ள பக்தர்களின் பேட்டி:எம்.சரவணன், ஈரோடு: நேற்று முன்தினம் 4 மணிக்கு கூடலூர் வந்தோம். நீண்ட தொலைவில் இருந்து வந்துவிட்டு சபரிமலைக்கு செல்ல முடியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
தொடர்ந்து பஸ் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்று ஒரு நாள் பார்த்துவிட்டு ஊருக்கு திரும்ப வேண்டியதுதான்.ராஜா, புதுச்சேரி: நாங்கள் 6 பேர் புதுச்சேரியில் இருந்து வந்தோம். தமிழர்களுக்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் செயல் கண்டிக்கத்தக்கது. தமிழருக்கு ஆதரவு தெரிவித்து, இந்த ஆண்டு கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் செல்லாமல், புதுச்சேரியில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி எங்களது விரதத்தை முடிக்க உள்ளோம். இன்று மாலை ஊருக்கு திரும்ப உள்ளோம்.இ.வி.ஜோதி, விழுப்புரம்: குருசாமியான எனது தலைமையில் 30 பக்தர்கள் வந்துள்ளோம். எங்களுடன் முதல் ஆண்டு வரும் கன்னிச்சாமிகள் அதிகமாக வந்துள்ளனர். இங்குள்ள பிரச்னையை விழுப்புரத்தில் இருக்கும் அவர்களின் குடும்பத்தாரிடம் கூறினோம். முதல் ஆண்டு செல்லும் கன்னிச்சாமிகளை எப்படியாவது சபரிமலைக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறியுள்ளனர். அதனால், எத்தனை நாட்களானாலும் கோயிலுக்கு சென்று விட வேண்டும் என்ற முடிவில் உள்ளோம்.
ஐயப்ப பக்தர்களுக்குஅன்னதானம்: வாகனப்போக்குவரத்து தடைபட்டதால் சபரிமலைக்குச் செல்ல முடியாமல் தவித்த ஐயப்ப பக்தர்களுக்கு, கூடலூர் மக்கள் தங்குவதற்கு இடவசதியும், அன்னதானமும் செய்து வருகின்றனர். பெரியாறு அணைப்பிரச்னையால், தேனி மாவட்டம் கூடலூரில் நேற்று முன்தினம் நடந்த மறியலால், நீண்ட தொலைவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை கூடலூரில் உள்ள பொதுமக்கள், கூடல் சுந்தரவேலவர் கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து, காலை உணவு, மதியம் சாப்பாடு, இரவு டிபன் வழங்கி வருகின்றனர். சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட போதிலும், கூடலூர் பொதுமக்களின் உபசரிப்பால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.