பதிவு செய்த நாள்
09
அக்
2017
12:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழாவை, பக்தர்களுக்கான விழாவாக கொண்டாட வேண்டும், என, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் கூறினார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பத்து நாட்கள் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது. மனிதனின் வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படும் விழாவின், பத்தாம் நாளன்று, 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்படும். இதை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். இவ்வளவு சிறப்பு மிக்க கார்த்திகை தீப திருவிழா, கடந்த சில ஆண்டுகளாக, பாதுகாப்பை காரணம் காட்டி, மஹா தீப திருவிழாவிற்கு, மூன்று நாட்கள் முன்னதாகவே, மாட வீதியில் பக்தர்களை செல்ல விடாமல் கெடுபிடி செய்கின்றனர். உள் மாட வீதியான, வட ஒத்தவாடை தெரு, தென் ஒத்தவாடை தெரு, ராஜகோபுரம் முன்புற தெரு ஆகிய பகுதிகளில், பக்தர்களை செல்ல அனுமதிக்காமல், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்படுகின்றனர். இதுபோல், சம்பிரதாய அரசு விழாவாவே, தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை தவிர்த்து, திருப்பதியில், பத்து நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா போல், நகரில் ஆங்காங்கே அலங்கார வளைவு, தோரணங்கள் கட்டி, தீப திருவிழாவை களை கட்டச்செய்து, பக்தர்களுக்கான விழாவாக கொண்டாட வேண்டும். திருவிழா நடத்துவது குறித்து, பொதுமக்களிடம், மாவட்ட நிர்வாகம் முன்னதாகவே கருத்து கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.