செக்கானுாரணி: செக்கானுாரணி அடுத்து தேங்கல்பட்டி மந்தையம்மன் கோயில், கே.புளியங்குளம் வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாக்கள் நடந்தன. இதையொட்டி காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர். முதல் நாள் தேங்கல்பட்டி மந்தையம்மன் கோயில் முன் பெண்கள் பொங்கல் வைத்தனர். ஏராளமானோர் மஞ்சள் நீர், மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத் தினர். தொடர்ந்து சக்தி கிடா வெட்டப்பட்டு, பக்தர்கள் மீது அச்சு வெல்லம், வாழை பழங்கள் எறியப்பட்டன. இரண்டாவது நாள் கே.புளியங்குளம் வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. தேங்கல்பட்டி, மாயாண்டி பொதுமக்கள் பொங்கல் பானைகள், மஞ்சள் நீர் குடங்களுடன் தேங்கல்பட்டியில் இருந்து செக்கானுாரணி வழியாக ஊர்வலமாக சென்றனர். கோயிலை அடைந்ததும் பொங்கல் வைத்தும், மஞ்சள் நீராட்டியும் அம்மனை வழிபட்டனர். சக்தி கிடா வெட்டப்பட்டது. அச்சு வெல்லம், பழங்கள் வீசப்பட்டன. பின்னர் கே.புளியங்குளம் பொதுமக்கள் வடக்குவாச்செல்லி அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். ஏராளமானோர் அழகுகள் குத்தியும், மஞ்சள் நீர் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.