பதிவு செய்த நாள்
27
அக்
2017
12:10
கூடலுார்: கூடலுார் அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரிய, பூ புத்தரி நெற்கதிர் அறுவடை திருவிழா சிறப்பாக நடந்தது. நீலகிரி மாவட்டம், கூடலுார் புத்துார்வயல் பகுதியில், பனியர் இன பழங்குடி மக்கள், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், அறுவடை திருவிழா கொண்டாடு கின்றனர். இது, பூ புத்தரி என, அழைக்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, நம்பாலக்கோட்டை வேட்டைகொருமகன் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. திரளான பழங்குடி மக்கள் பங்கேற்று, புத்துார்வயல் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு, குல தெய்வத்துக்கு விளக்கு ஏற்றி, பூஜை செய்தனர். 10 நாட்கள் விரதமிருந்த ஆண்கள், நெற்கதிர்களை அறுவடை செய்து, அவற்றை மூன்று கட்டாக கட்டினர். பின், பகவதி அம்மன் மண்டபத்துக்கு நெற்கதிரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அங்கு, நெற்கதிருக்கு பூஜை செய்தனர்; தொடர்ந்து, பழங்குடி பெண்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. அப்பகுதியில் இருந்து, நெற்கதிர் கட்டு ஒன்றை, மங்குழி பகவதி அம்மன் கோவிலுக்கும், மற்றொன்றை, விஷ்ணு கோவிலுக்கும் எடுத்துச் சென்றனர். மூன்றாவது கட்டை, நம்பாலக்கோட்டை வேட்டைகொருமகன் கோவிலுக்கு, ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். விழாவில் பங்கேற்ற சிலர் கூறுகையில், பல நுாற்றாண்டுகளாக, இவ்விழா கொண்டாடப்படுகிறது. நெற்கதிர் அறுவடை செய்து, பூஜை செய்து, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவ்விழாவுக்கு பின், முதிர்ந்த நெல் அறுவடை செய்யப்படும் என்றனர்.