பதிவு செய்த நாள்
27
அக்
2017
12:10
திருப்போரூர்: திருப்போரூர், கந்த சுவாமி பெருமான், தெய்வானையை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவம், சேகர் ரெட்டியின் மனைவி, மகளுக்காக, முகூர்த்த நேரத்தை தாண்டி, காத்திருக்க நேர்ந்தது. திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், 20ல் கந்த சஷ்டி விழா துவங்கியது. தொடர்ந்து, ஏழு நாட்கள் நடந்த விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவின் நிறைவு உற்சவமான, சுவாமியின் திருக்கல்யாணம், நேற்று மாலை, 6:00 - இரவு, 7:30 மணிக்குள் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழிலும் அவ்வாறே இருந்தது. ஆனால், திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகள், இரவு, 7:00 மணிக்கு பிறகும், மந்தகதியிலேயே நடந்தது.
ஒரு கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த முகூர்த்த நேரத்தையும் கடந்து, திருமணத்திற்கான பூஜைகள் நடந்தன. திருக்கல்யாணத்தை காண காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி - அம்பாள் திருமண நேரம் கடந்தும், இன்னும் ஏன் நடக்கவில்லை... என, முணுமுணுத்தனர்.பின், ஒரு வழியாக, இரவு, 8:00 மணிக்கு மேல், கந்தசுவாமி பெருமான், தெய்வானையை மணம் முடித்தார். அதைதொடர்ந்து, தீபாராதனைகள் நடந்தது. அப்போது, கூடியிருந்த ஊர் மக்களையும், பக்தர்களையும் தள்ளிய படி, திருக்கோவில் பணியாளர்கள் இரு பெண்களை, திருமணம் நடக்கும் பகுதிக்கு அழைத்து வந்தனர். அந்த இரு பெண்களுக்காக தான் திருமணம் இவ்வளவு தாமதமாக நடந்ததா என, கோவில் நிர்வாகத்தையும், சிவாச்சாரியார்களையும் திட்டிய படி, பக்தர்கள் வெளியேறினர். சிவாச்சாரியார்களால் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட அந்த இரு பெண்களும், சேகர் ரெட்டி யின் மனைவி, மகள் என, அப்பகுதியினர் பேசி கொண்டனர்.