பதிவு செய்த நாள்
27
அக்
2017
12:10
பழநி: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக்., 20ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது.
நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மலைக் கோயிலில் பட்டத்துக்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் குழுவினர் விநாயகர் பூஜையுடன், ஆறு கலசங்கள் வைத்து சண்முகர், வள்ளி தெய்வானைக்கு புனிதநீரில் அபிஷேகம், சிறப்பு ஹோம பூஜை நடத்தினர். மங்கள வாத்தியங்கள் முழங்க காலையில் மாங்கல்யதாரணமும் மாலை மாற்றுதலும் நடந்தது. திருமண கோலத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானை அருள் பாலித்தனர். மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 8:௦௦ மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இரவு 9:00 மணிக்குமேல் சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் உலா வந்தார். இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா மற்றும் சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, செந்தில்குமார், கந்தவிலாஸ் நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன் பங்கேற்றனர்.