பரமக்குடி, பரமக்குடியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடந்தது. பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா அக். 20 ல் காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் மாலை 6:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்ஸவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து சக்தி வேல் பெற்றுக்கொண்ட சுப்பிரமணிய சுவாமி நேற்று முன்தினம் மாலை மயில் வாகனத்தில் அலங்காரமாகி வீதியுலா வந்தார். மாலை 6:30 மணிக்கு கோயில் முன் வைகை ஆற்றின் கரையோரம் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு கோயில் முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமிக்கு பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. பின்னர் தாலிக்கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
*பரமக்குடி பாரதிநகர் செல்வக்குமரன் கோயிலில் 32 ம் ஆண்டு கந்தசஷ்டி விழா அக். 20 ல் காப்புகட்டுடன் துவங்கியது. தினமும் மூலவர் தர்பார், வேடன், விருத்தன், அம்பாள், சண்முகர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு சூரனைவதம் செய்யும் நிகழ்ச்சியும், நேற்று மாலை 6:00 மணிக்கு தெய்வானையுடன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.