பதிவு செய்த நாள்
28
அக்
2017
12:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: வேண்டியவரின் வேண்டுதலை நிறைவேற்றும் பெண் தெய்வமான ஆண்டாள் அவதார நந்தவனம் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பசுமை சோலையாய், குளுமையுடனும், பக்தியுடனும் விளங்குவது தனிசிறப்பாகும், ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் என்பதுடன் அக்கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்புமிக்க வரலாறு உண்டு. அதில் திருப்பூர நந்தவனம் மிகவும் சிறப்பு. இங்கு தான் பெரியாழ்வார், ஆண்டாளை கண்டெடுத்தார். மலர்பிரியையான ஆண்டாள் குடிக்களைந்த மாலை தான் இன்றும் மதுரை கள்ளழகர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருப்பதி திருவேங்கடமுடையான் ஆகியோர்களின் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இத்தகைய பெருமைவாய்ந்த ஆண்டாள் கண்டெடுத்த நந்தவனத்தில் துளசி, இருவாச்சி, செண்பகம், மல்லிகை மற்றும் கிளிக்குரிய மாதுளை மொட்டு, கிளிக்கு கட்டப்படும் எழிலை ஆகியவை நிறைந்து மிகவும் பசுமையாய் காணப்படுகிறது.
ஒவ்வொரு தமிழ் மாதம் பூரநட்சத்திரநாளன்று மாலை 5:00 மணிக்கு இந்த நந்தவனத்தில் ஆண்டாள் எழுந்தருளும் போது, திருப்பாவை, திருப்பல்லாண்டு சேவாக்காலம் நடக்கிறது. இச்சன்னிதியில் ஆண்டாளை தரிசித்தால், மனநிம்மதி, ஆயுள்விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறுதல், திருமணம் மற்றும் குழந்தைப்பேறு ஆகியவை கிட்டும். தினமும் காலை 6:00 மணி முதல் ஒருமணிவரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.