பதிவு செய்த நாள்
28
அக்
2017
12:10
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு, சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள், பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும், கார்த்திகை தீப திருவிழா பிரசித்தி பெற்றது. விழாவை காண, லட்சக்கணக்கான மக்கள் வருவர். இந்தாண்டு தீப திருவிழா, வரும் நவ., 23ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
டிச.,2ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். தீப திருவிழாவில், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் வாகனம் பழுது பார்த்தல், திருவிழா பத்திரிகை அடித்தல், வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்தல், உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் டெண்டர் விடும் பணி முடிந்துள்ளது. 10 நாட்கள் நடக்கும் தீப திருவிழாவில், தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி வாகனத்தில் வீதி உலா வருவர். அவ்வாறு வரும் வாகனங்களான வெள்ளி மூஷிகம், வெள்ளி மயில், வெள்ளி ரிஷபம், பல்லக்கு, தங்க நாக விமானம், வெள்ளி காமதேனு, வெள்ளி ரிஷபம், குதிரை வாகனம் என, 60க்கும் மேற்பட்ட வாகனங்களை, பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நவ., 29ல் நடக்கும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் தேர்கள் வரும், 15க்குள் பழுது பார்க்கும் பணி முடிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, அடிப்படை வசதி செய்து தருதல், பாதுகாப்பு ஏற்பாடு வசதிகள் செய்தல் குறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கோவிலில் ஆய்வு செய்தார். கலெக்டர் கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் உடன் இருந்தனர்.