ஈரோட்டில் காரைவாயக்கால் கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது நாகர் ஆலயம். இங்குள்ள மூலவர் நாகர் கருவறையில் சுயம்புவாக பிரமாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பாலவிநாயகர், பாலமுருகன், சனீஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். ஆலயத்தின் மேற்பகுதியில் சுமார் முப்பத்திரண்டு அடி நீளம் கொண்ட, ஐந்து தலையுடன் கூடிய நாகர் நிறுவப்பட்டுள்ளார். கோயிலின் எதிரே பெரிய அரச மரமும் அதனடியில் நாக பிரதிஷ்டையும் காணப்படுகின்றன. பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தினடியில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். கோயிலின் எதிரே பழமையான விநாயகர் கோயில் உள்ளது. காரை வாய்க்காலில் நாகர் ஆலயம் அமைந்தது குறித்து ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. ஒரு சமயம், இப்பகுதி மன்னன் காளிங்கராயன் கனவில் அவன் வழிபட்ட சிவன் தோன்றி, ஒரு நாகத்தைச் சுட்டிக் காட்டி, அந்நாகம் போகிற வழியாக வாய்க்கால் வெட்டச் சொல்லி கட்டளையிட்டதாகவும்; அதன்படி வாய்க்கால் வெட்டியதாகவும்; அணைகட்டுகிற இடத்தை நாகம் பவானியாற்றின் குறுக்கே படுத்துக் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதே நாகம்தான் இங்கே முக்தி அடைந்து சுயம்புவாக காட்சி தருகிறது என்கிறார்கள். காளிங்கராயன் வெட்டியதால் காளிங்கராயன் வாய்க்கால் என அழைக்கப்பட்டு பின்னர் காரை வாய்க்கால் என வழங்கப்படுகிறது. இந்த நாகரை வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியத்தடைகள், திருமணத்தடைகள், நாகதோஷம் நீங்கி, அனைத்து நன்மைகளும் உண்டாகும்.