பதிவு செய்த நாள்
07
நவ
2017
10:11
சபரிமலையில் பெய்து வரும் பலத்த மழையால், அங்கு, பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள, பிரசித்தி பெற்ற, அய்யப்பன் கோயில் அமைந்துள்ள சபரிமலையில், மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் துவங்க, இன்னும் ஏழு நாட்களே உள்ளன. லட்சக்க ணக்கான பக்தர்கள் திரண்டு வருவதை மனதில் வைத்து, அதற்கு தேவையான பணிகள் வேகமாக நடக்கின்றன.
அன்னதான மண்டபத்தில், அதிகமான பக்தர்கள் சாப்பிடும் வகையில், நவீன சமையலறை கட்டும் பணி நடக்கிறது; நடைப்பந்தல் கூரை சீரமைக்கப்பட்டு உள்ளது. பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டு உள்ளதால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான பணிகளும் நடக்கின்றன.
இருமூடி கட்டு இல்லாத பக்தர்களும், நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் 18ம் படியேறி வரும் பக்தர்களும், தரிசனம் செய்வதற்கு, வடக்கு வாசலில் வசதி செய்யப்பட்டிருந்தது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு, அய்யப்பா சேவா சங்க அலுவலகம் எதிரில் உள்ள கட்டடத்தில், முதல் தளத்தில் வேலிகள் அமைக்கப்படுகின்றன.
இங்கு, பக்தர்கள் வரிசையில் நின்று, சன்னி தான மேம்பாலத்தில் சென்று தரிசனம் முடியும். இதன் மூலம், வடக்கு வாசலில் ஏற்படும் நெருக்கடி குறையும், சபரிமலையில், தற்போது தினமும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.