கரூர்: கரூர் கொங்கு மன்றத்தில் நடந்த வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய ஸ்வாமி திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் அன்னபூரணி அறக்கட்டளை சார்பில் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று முன்தினம் விநாயகர் கோவிலில் துவங்கியது. நேற்று காலை ஒன்பது மணிக்கு சீர் வரிசை மற்றும் மாப்பிள்ளை அழைப்புடன் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. காலை 11 மணிக்கு ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமிக்கும், வள்ளி தேவசேனாவுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து கரூர் சாமிநாத தேசிகரின் மாணவர்களின் தேவரா திருப்புகழ், மதியம் 12 மணிக்கு திருமாங்கல்ய தாரணம், தீபமங்கள ஜோதி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் சிவகற்பகம், கவுரவ தலைவர் சரளாதேவி, தலைவர் கீதாராணி, செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் லட்சுமி பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.