குற்றாலம் : குற்றாலம் மவுனசாமி மடத்தில் நடந்த பீடாதிபதி பட்டாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டார்.குற்றாலம் மவுனசாமி மடம் (ஸ்ரீசித்தேஸ்வரி பீடம்) பீடாதிபதி ஸ்ரீசித்தேஸ்வரானந்த பாரதி சுவாமி பீடாதிபதியாக பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெற்று 10ம் ஆண்டு துவங்குகிறது. இதனை முன்னிட்டு பட்டாபிஷேகம், ரத்னோசவம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் கிரீடம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தமிழக கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசும்போது, நானும் சுவாமி சித்தேஸ்வரானந்த பாரதியும், அவரது வாழ்க்கை வரலாற்றை "எட்டி குலபதி என்ற புத்தகமாக எழுதிய புத்தேரி வெங்கடேஸ்வரராஷம் பள்ளி நண்பர்கள். பள்ளியில் படிக்கும் போதே சுவாமி தனிமையில் இருந்து சிந்திப்பார். அவர் சிந்தித்ததைதான் செயல்படுத்தி வருகிறார்.தற்போது ஆன்மிகம் அதிகரித்து வருகிறது. அதேபோன்று குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது. இவை இரண்டு தண்டவாளங்கள் போன்று நீண்டு வருகிறது. இதில் குற்ற செயல்கள் குறைக்கப்பட வேண்டும் என்றார் கவர்னர் ரோசய்யா.சுவாமியின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான "எட்டி குலபதியை கவர்னர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் கவர்னர் ரோசய்யாவின் மனைவி சிவலட்சுமி, தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., வேங்கடரமணா, அரசு வக்கீல்கள் மருதுபாண்டியன், சிவாஜி செல்லையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மவுனசாமி மடத்தின் மேலாளர் மூர்த்தி ராஜூ செய்திருந்தார்.டி.ஐ.ஜி.வரதராஜூ, எஸ்.பி.விஜயேந்திரபிதரி தலைமையில் தென்காசி டி.எஸ்.பி.பாண்டியராஜன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.