பதிவு செய்த நாள்
15
நவ
2017
04:11
மைசூரு: கன்னட கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையான நேற்று முன்தினம், நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில் சிறப்பு தரிசனத்தில், 30 ரூபாய் டிக்கெட் மூலம், 1.20 லட்சம் ரூபாயும், 100 ரூபாய் டிக்கெட் மூலம், 1.95 லட்சம் ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. கன்னட கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையன்று, நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில், மாநிலத்தின் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதிகாலை, 4:00 மணியிலிருந்து நஞ்சன்கூடு வந்த பக்தர்கள், கபிலா நதியில் புனித நீராடிவிட்டு, நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீகண்டேஸ்வரரை தரிசித்தனர். அர்ச்சகர் நாகசந்திர தீட்ஷிதர் தலைமையில், ஸ்ரீகண்டேஸ்வர சுவாமிக்கு அபிஷேகம், வில்வ அர்ச்சனை, பஞ்சாமிர்த அபிஷேகம், ருத்ராபிஷேகம் நடந்தது. பக்தர்கள், கோவில் வெளி வளாகத்தில், முடி காணிக்கை, அங்கபிரதட்சனம், துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் விளக்கேற்றி வழிபட்டனர். கோவிலில் சிறப்பு தரிசனத்தில், 30 ரூபாய் டிக்கெட் மூலம், 1.20 லட்சம் ரூபாயும், 100 ரூபாய் டிக்கெட் மூலம், 1.95 லட்சம் ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. ஸ்ரீகண்டேஸ்வர கோவில் வளாகத்திலுள்ள உணவு கூடத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலின் வெளிப்பகுதியில், பெங்களூரு, மைசூரு, சிக்கபல்லாபூரை சேர்ந்த பக்தர்கள், பிரசாதம் வினியோகித்தனர். கண்டேஸ்வரர் சுவாமியின் முத்து பல்லக்கு உற்சவம், கோவிலின் வெளிப்பகுதியில், வாண வேடிக்கைகள் நடந்தன. நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதே போன்று, நஞ்சன்கூடு தாலுகா சிக்கயநனசத்ரா கிராமத்தில், பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரா கோவிலில், லிங்கபட்டரகுடி, காசி விஸ்வநாதர் கோவில், தேவிரம்மஹள்ளி சரண சங்கம்ம மடத்தின், 108 லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.