மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2017 12:11
மயிலாடுதுறை:- மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) கடைமுக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் பிரம்மவனம் (மயிலாடுதுறை). அங்கு சிவபெருமானும் மயில் உரு கொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப் பாயாக என்று அசரிரி கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வே ண்டும்.நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினாள் என்பது ஐதீகம். இதனை நினைவுக்கூறும் வகையில் ஐப்பசி1ம் தேதி தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கி அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி 30ம் தேதி துலா உற்சவம் (கடைமுக தீர்த்தவாரி) சிறப்பாக நடப்பது வழக்கம்.
முக்கிய நாளான கடைமுக தீர்த்தவாரி இன்று 16 தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதிகாலை முதல் ஆயிரகணக்கான பக்தர்கள் நீராடி வழிபாடு செய்துவருகின்றனர். விழாவை முன்னிட்டு இன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.