பதிவு செய்த நாள்
16
நவ
2017
12:11
உத்திரமேரூர் : உத்திரமேரூர் அருகே, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஹாவீரர் சிலை, கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது வயலக்காவூர். இக்கிராமத்தில், சமண மதத்தை தோற்றுவித்த, மஹாவீரர் சிலை இருப்பதாக தெரிந்தது. தகவலறிந்து, சென்னையைச் சேர்ந்த சமண சமய ஆய்வாளர், சசிகலா மற்றும் திருக்கழுக்குன்றம் ஜீவக்குமார் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள், அப்பகுதிக்கு சென்றனர். செய்யாற்றங்கரை ஓரத்தில் இருந்த மஹாவீரர் சிலையை கண்டெடுத்து, ஆய்வு செய்தனர். அச்சிலை, 1,000 ஆண்டுகள் பழமை வாந்த, 24ம் தீர்த்தங்கரர் சிலை என்பது தெரிந்தது. மஹாவீரரின் இரண்டு புறமும் சாமரம் வீசுவது போன்ற குறியீடு உள்ளது. தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் வழக்கமாக காணப்படும், முக்குடை உடைபட்டுள்ளது. இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர் ஜீவக்குமார் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அநேக இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைக்கின்றன. திருப்பருத்திகுன்றத்தில், இரண்டு சமண ஆலயங்கள் உள்ளன. ஆர்ப்பாக்கம் மற்றும் மாகரல் கிராமங்களிலும் சமண ஆலயங்கள் உள்ளன. அங்கம்பாக்கம், வில்லியம்பாக்கம், படூர், ஏனாத்துார், ராவதநல்லுார், காவாந்தண்டலம் மற்றும் நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும், மஹாவீரர் சிற்பங்கள், ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிலைகள் கிடைப்பதன் மூலம், காஞ்சிபுரம் ஒரு காலத்தில், ஜைன காஞ்சியாக இருந்தது உறுதியாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.