பதிவு செய்த நாள்
16
நவ
2017
01:11
சென்னிமலை: சென்னிமலை, மலை மீதுள்ள முருகன் கோவிலில், காலை நேரம் தரிசனத்திற்கு நடை திறப்பதில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை, மலை மீதுள்ள முருகன் கோவில், கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் உட்பட பல வரலாற்று பெருமைமிக்கது. இங்குள்ள முருகனை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சென்னிமலை முருகப்பெருமான் மூலவர், செவ்வாய் அம்சமாக விளங்குவதால், பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதுவரை காலை, 5:00 மணிக்கு நடை திறப்பும், மலை அடிவார கேட் திறப்பும் இருந்தது. இதை மாற்றி பிரதிவாரம் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்கள், திருமண முகூர்த்த நாட்களில் அடிவாரம் மலைப்பாதை கேட் அதிகாலை, 4:30 மணிக்கே திறக்கப்படும். கோ பூஜை, 4:45 மணிக்கு நடைபெற்று, மூலவர் சன்னதி நடை காலை, 5:00 மணிக்கு திறக்கப்படும். சாதாரண நாட்களில் அடிவாரம் மலைப்பாதை காலை, 5:30 மணிக்கு திறக்கப்பட்டு, கோ பூஜை, 5:45 மணிக்கு நடைபெற்று, மூலவர் சன்னதி நடை காலை, 6:00 மணிக்கு திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் இரவு, 8:00 மணிக்கு நடை சாத்தாப்படும்.