பதிவு செய்த நாள்
13
டிச
2011
11:12
முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்த திட்டமான பேட்டரி கார் (மின்கல மகிழுந்து), விரைவில் திருத்தணி முருகன் மலைக் கோவிலில் வலம் வருவதற்கு தயாராக உள்ளது. இந்த கார் மூலம் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் மூலவரை எளிதாக தரிசிக்கலாம். ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில். தமிழகம், ஆந்திரா, கர்நாடக உட்பட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர். மாதம்தோறும் வரும் கிருத்திகை, தமிழ் புத்தாண்டு ஆகிய விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், ஆடிக்கிருத்திகை மற்றும் டிச., 31ம் தேதி நடக்கும் திருப்படித் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபடுகின்றனர்.
வளர்ச்சி பணிகள்: முருகன் கோவிலில் புதியதாக 25 கோடி ரூபாய் செலவில் தங்க விமானம் அமைக்கப்பட்டுள்ளது. 6 கோடி ரூபாயில், ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. மலைக் கோவிலில் இருந்து மூலவரை தரிசிக்க செல்லும் படிகளை வயதான பக்தர்கள் ஏறுவதற்கு முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு வசதியாக பின்புறம் உள்ள நுழைவாயிலில் அருகே, "லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், கோவிலுக்கு தினசரி பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கோவிலின் உண்டியல் வசூலும் இரு மடங்காக உயர்ந்தது.
முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு: மலைக்கோவிலுக்கு பஸ் மூலம் வரும் பக்தர்கள் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அரை கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று கோவில் நுழைவாயிலில் செல்ல வேண்டும். இதில் மலைக்கோவிலுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, சட்டசபையில், திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதியும், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக, மலைக்கோவிலில் பேட்டரி கார் இயக்கப்படும் என அறிவித்தார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து கோவில் நிர்வாகம், திருக்கோவில் நிதியில் இருந்து பேட்டரி கார் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, பேட்டரி காரும் வாங்கப்பட்டுள்ளது. இந்த காரில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் என, ஒரே நேரத்தில் ஆறு பேர் வரை ஏறி, கோவில் பின்புறம் உள்ள நுழைவாயிலுக்கு சென்று அங்கிருந்து "லிப்ட் மூலம் மூலவரை தரிசிக்கலாம். இந்த பேட்டரி கார் விரைவில் மலைக் கோவில் வளாகத்தில் வலம் வரவுள்ளது.
பேட்டரி கார் துவக்கம் எப்போது?
பேட்டரி கார் துவக்கம் எப்போது குறித்து திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் தனபால் கூறும் போது, பக்தர்களுக்கு வசதிக்காக முதல்வர் ஜெயலலிதா பேட்டரி கார் திட்டத்தை சட்டசபையில் அறிவித்து உள்ளார். அதன்படி நாங்கள் திருக்கோவில் நிதியின் இருந்து 4.75 லட்சம் ரூபாய் செலவில், புதியதாக பேட்டரி கார் வாங்கி மலைக்கோவில் வளாகத்தில் தயார் நிலையில் வைத்துள்ளோம். அரசு மற்றும் இந்து சமய அறநிலை ஆணையர் ஆகியோரின் அனுமதி கிடைத்தவுடன் பேட்டரி கார் செயல்பாட்டிற்கு வரும். இந்த கார் மூலம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக ஏறிச் சென்று மூலவரை தரிசிக்கலாம். இதுபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட குடிநீர், கழிவறை உட்பட பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது, என்றார்.