திருப்பதி: திருப்பதி பிரசாதமான லட்டின் விலையை உயர்த்த தேவஸ்தானம் போர்ட்டு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் ஒரு லட்டை தயார் செய்ய ரூ.37 செலவு ஆகிறது எனவும் சலுகை விலையில் லட்டு வழங்கப்படுவதால் ஆண்டுக்கு ரூ.200 கோடி கூடுதல் செலவாகிறது எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. லட்டு விலையை உயர்த்தினால் பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் என்பதால் இதுவரை லட்டு விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் லட்டு விலையை எவ்வளவு உயர்த்துவது என ஆலோசித்து, அரசு அனுமதியுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.