திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் மதுரை ஆலவாயர் அருட்பணி மன்றம் மற்றும் பாகம்பிரியாள் சேவை மையம் சார்பில் 63 நாயன்மாகர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக நடந்த 108 கோ பூஜையில் பசுமாடுகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சந்தனம், குங்குமம் பூசி, தீப, ஆராதனை நடந்தது. மாடுகளுக்கு உணவாக பொங்கல் பிரசாதம் கொடுக்கப்பட்டது. பின்பு 63 நாயன்மார்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு 108 கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம், 108 மூலிகை அபிஷேகங்கள் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்தது. மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடந்த இப் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். மாலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. தேவஸ்தான செயல் அலுவலர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.