பதிவு செய்த நாள்
27
நவ
2017
11:11
பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநி அடிவாரம் ரோடு, கிரிவீதியை ஆக்கிரமித்து நுாற்றுக்குமேற்பட்ட கடைகள் வைத்துள்ளனர். இதனால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கார்த்திகை திருவிழா, சபரிமலை சீசன் காரணமாக, பழநி மலைக்கோயில் முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சன்னதிவீதி, அடிவாரரோடுகளின் இருபுறத்தையும், கிரிவீதியில் நடுவேயும் ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள், பழக்கடைகள், தட்டுவியாபாரிகள் என நுாற்றுகணக்கானவர்கள் வியாபாரம் செய்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில்நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்று ஞாயிறுவிடுமுறையில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதன்காரணமாக பாதவிநயாகர்கோயில், பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறைநாட்களில் கூடுதலாக போலீசாரை நியமிக்க மாவட்ட எஸ்.பி., சக்திவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 மணிநேரம் காத்திருப்பு: நேற்று ஞாயிறு பொதுவிடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்குமேலாக காத்திருந்தினர். மலைக்கோயில் பொதுதரிசனவழியில் பக்தர்கள் நான்கு மணிநேரம்காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவு 7:30 மணி தங்கரத புறப்பாட்டை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.