பதிவு செய்த நாள்
27
நவ
2017
12:11
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அகல் விளக்கு தயாரிப்பு, தீவிரமாக நடக்கிறது. புன்செய்புளியம்பட்டி அடுத்துள்ள அலங்காரிபாளையத்தில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 50 ஆண்டுகளாக மண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அனுமதி பெற்று, காவிலிபாளையம் குளத்தில் இருந்து, இலவசமாக களிமண் எடுத்து பயன்படுத்துகின்றனர். மண்பாண்டங்கள் மட்டுமின்றி, சீசனுக்கு தகுந்தவாறு, சாமி சிலைகள், மண் பொம்மை மற்றும் கார்த்திகை தீப திருநாளுக்காக, மண் விளக்கும் தயாரிக்கின்றனர். கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில், விளக்குகள் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒருவர் தினமும், 1,000 விளக்குகள் வரை தயாரிக்கிறார். வெயிலில் உலர வைத்து, தீயில் சுட்டு பதப்படுத்துகின்றனர். அதன்பின், கோணிப்பையில் கட்டி இருப்பு வைக்கின்றனர். ஒரு கோணிப்பை, 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதி வியாபாரிகளும், நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். கார்த்திகை தீபம் முடிந்ததும், தை மாதத்தில், பொங்கல் பண்டிகைக்கு மண் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம் என்று, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி பழனியப்பன் கூறியதாவது: ஆரம்பத்தில், 30 குடும்பத்தினர் இதில் ஈடுபட்டிருந்தோம். எங்கள் வாரிசுகள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் தற்போது, 10 குடும்பத்தினர் மட்டுமே ஈடுபட்டுள்ளோம். கிராமங்களிலும், மண்பாண்டங்கள் பயன்படுத்தும் பழக்கம் குறைந்து விட்டது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர் மற்றும் கோவை பகுதி வியாபாரிகள், மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.