பதிவு செய்த நாள்
28
நவ
2017
12:11
தமிழக– கேரள எல்லையில் அமைந்துள்ள சிறுகிராமம் பெரும்பதி. அங்கு, தென்னந்தோப்புகளுக்கு இடையே, அழகிய ஓடையின் கரையில் அமைந்துள்ளது, ஐந்து தலை முறைக்குமுன் கட்டப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோவில். ஓடையில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, கோவிலுக்குள் மழை நீர் புகுந்து, கடவுளின் காலடியை நனைப்பது வழக்கம். கோவிலுக்கு முன், ஓடையின் நடுவே தீர்த்தக்கிணறு உள்ளது. கிராமத்தில் வாழ்ந்த தன்னாசியப்பன் என்ற சித்தரின் வாக்குப்படி, புற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கோவில் உருவெடுத்ததாக, மக்கள் கூறுகின்றனர். கிழக்கு நோக்கிய கோவில் வாசலில், 200 ஆண்டு கால வரலாற்றைதாங்கி நிற்கும் பழமையான காரமரம் காட்சி அளிக்கிறது. கோவிலின் இடது பக்கத்தில், அரங்கநாத சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். வலது பக்கத்தில், சுயம்பும், புற்றும் உள்ளன. புரவிபாளையத்துக்கு சென்ற சித்தர், பெரும்பதிக்கு திரும்ப முடியவில்லை. உயிர் பிரியும் போது, ‘உடல் தான் இங்கே புதைக்கப்பட்டிருக்கும், எனது ஆத்மா பெரும்பதி கோவிலில் தான் இருக்கும்’ என தெரிவித்ததால், இக்கோவிலில் அற்புத சக்தி இருப்பதாக நம்புகின்றனர். அதனால், சித்தருக்கும் உருவச்சிலை பொறிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஒட்டு மொத்த கிராம மக்களும் வழிபாட்டில் பங்கேற்கின்றனர். சப்பர ஊர்வலம், சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. குழந்தை வரம் கேட்டு வருபவர்கள், திருமணம் மற்றும் சுபகாரியங்கள்கை கூட வரம் கேட்டு, மக்கள் வழிபடுகின்றனர். சிவராத்திரி சிறப்பு பூஜை, தை பொங்கலன்று பூநோன்புக்கு மக்கள் அதிகளவில் கூடுகின்றனர்.