பதிவு செய்த நாள்
01
டிச
2017
10:12
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் கருவறை, பக்தர்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையே, போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.
சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள், 2015ல் துவங்கின. 2016 செப்.,4ல், பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில், சேலத்தை சேர்ந்த சிலர், கருவறையை இடிக்க தடை கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கமிட்டி அமைத்து, நீதிபதி சத்யநாராயண உத்தரவு பிறப்பித்தார். அதன் பின், கருவறையை தவிர பிற கட்டடங்கள் இடிக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன், கடந்த மாதம் கருவறையை இடிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, கருவறையை இடிப்பதற்கான நடவடிக்கையை, கோவில் நிர்வாகம் மேற்கொள்ள துவங்கியது. கருவறை அகற்றும் பணிக்காக, பாதுகாப்பு வழங்க கோரி கடந்த, 28ல், போலீசுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. நேற்று அதிகாலை, கருவறையை இடிக்கும் பணிகள் துவங்க இருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், ரஜினிசெந்தில் தலைமையில், கருவறையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கோவிலை முற்றுகையிடவும், கோவிலுக்குள் புகுந்து, பணிகளை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கோவிலுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு பணிகள் துவங்கின. கருவறையில் இருந்த மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்த பூசாரிகள், வெளியில் தூக்கி வர முயற்சித்தனர். நுழைவு வாயில் சிறியதாக இருந்ததோடு, சிலை அதிக எடை கொண்டதாக இருந்ததால், அவர்களால் தூக்க முடியவில்லை. பின்னர், சிலையை கயிறு கட்டி, வெளியே கொண்டு வந்து நெற்குவியலில் வைத்தனர். அதன்பின், கருவறை சுவர்கள், பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. பணிகள் நடந்து வந்த நிலையில், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பெண் வக்கீல் பிரவீணா, 45, கருவறை அருகே வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர் சென்று விட்டார்.
இது குறித்து, கோவில் நிர்வாக அதிகாரி மாலா கூறியதாவது: திருப்பணிகள் தாமதத்துக்கு, கோவில் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை. கடந்த, 2015ல் பணிகள் துவக்கப்பட்டதுமே, இதற்கு தடை ஏற்படுத்த பலர் முயற்சித்து வந்தனர். திருப்பணிகளை கவனிக்க வேண்டிய நிர்வாகம், நீதிமன்றத்துக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தில், எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. போடப்பட்ட ஒரே வழக்கும், தள்ளுபடி ஆகி விட்டது. சிலர் வழக்கு இருப்பதாக, தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும், உண்மைக்கு மாறானது. பணிகள் துவக்கப்பட்ட காலத்தில், 2.60 கோடி ரூபாய்க்கு திட்டமதிப்பீடு செய்யப்பட்டது. தடையால், மூன்று கோடி ரூபாயாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பணியை, ஓராண்டுக்குள் நடத்தி, 2019 ஆடிப்பண்டிகையை கொண்டாடும் வகையில் கோவில் தயாராகும். இவ்வாறு அவர் கூறினார்.