பதிவு செய்த நாள்
30
நவ
2017
04:11
சூரமங்கலம்: சேலத்தில், தொன்மை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் கருவறை, அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன், இடித்து அகற்றப்பட்டது. சேலம், பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே, தொன்மை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் மற்றும் கருவறை பிரகாரங்கள் சிதிலமடைந்து காணப்பட்டதால், சீரமைக்க அறநிலையத்துறை, அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன், திருப்பணி தொடங்கியது. இந்நிலையில், தொன்மையான கோவிலை இடிக்க அனுமதிக்கக் கூடாது என, பக்தர்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், பணியில் தொய்வு ஏற்பட்டு, கட்டுமான பணியில் தடை ஏற்பட்டது. இதற்கிடையில், புதிய கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டது. நள்ளிரவில், கோவில் கருவறையை அகற்ற, செயல் அலுவலர் மாலா தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், அதிகாலை மூலவர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து, அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். தகவலறிந்த பக்தர்கள், கோவில் முன் திரண்டு கோவிலை இடிக்கக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் மாநகர உதவி கமிஷனர் அன்பு தலைமையில், போலீசார் குவிக்கப்பட்டு அவர்களை தடுத்தனர். போலீசார் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாலை, 4:00 மணியளவில், கருவறை இடிக்கும் பணி தொடங்கி, முற்றிலும் அகற்றப்பட்டது.
இது குறித்து, செயல் அலுவலர் மாலா கூறியதாவது: இந்த கோவில், 700 ஆண்டு பழமையானது என, கூறுகின்றனர். அதற்கு கல்வெட்டு போன்ற எந்த ஆதாரமும் இல்லை; மேலும் தொன்மையானது இல்லை என, தொல்லியல் துறையினர் அறிக்கை கொடுத்துள்ளனர். சிலர், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, வழக்கு தொடுத்துள்ளனர். சட்டத்திற்கு உட்பட்டு, கடமையை செய்து வருகிறோம். வழக்கை சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.