பதிவு செய்த நாள்
01
டிச
2017
11:12
குன்னுார்:ஜெகதளா கிராமத்தில் ஹெத்தை பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, கொதுமுடி கோவிலுக்கான நடைபயணம் நிகழ்ச்சி நடந்தது.நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ஹெத்தையம்மன் பண்டிகை கடந்த, 27ம் தேதி துவங்கியது. இதில், ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல்பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய எட்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ஹெத்தையம்மன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதில், ஹெத்தைகாரர்கள் எனப்படும் பக்தர்கள், 48 நாட்கள் விரதத்தை துவக்கியுள்ளனர். முதல் நாளில் ’கத்திகை’ என அழைக்கப்படும் பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல், வழியாக தாய்வீடான கொதுமுடி கோவிலுக்கு நடைபயணம் துவக்கப்பட்டது. இதில், விரதம் மேற்கொண்ட பூஜாரி மற்றும் ஹெத்தைக்காரர்கள் அணிவகுத்து செல்ல நுாற்றுக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்து சென்றனர். தொடர்ந்து, மடித்தொரை சுத்தக்கல் கோவிலில், நடந்த பூஜையில் கிராம மக்களுக்கு ஆசி வழங்கப்பட்டது. வரும் ஜனவரி, 5ம் தேதி காரக்கொரை மடிமனையில் பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். ஜனவரி, 8ம் தேதி ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் ஹெத்தை பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.