சுற்றுலாத் துறை மூலம் ரூ.2.62 கோடி: சுருட்டப்பள்ளி கோவில் பணிகள் துவக்க விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2011 11:12
ஊத்துக்கோட்டை : இந்திய சுற்றுலாத் துறை மூலம் சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டேஸ்வரர் கோவிலுக்கு இரண்டு கோடியே 62 லட்ச ரூபாய்க்கு நலப்பணிகள் துவக்க விழா நடந்தது. தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி கிராமம். ஆலகால விஷத்தை உண்டு சிவபெருமான் மயக்க நிலையில் அன்னை பார்வதி மடியில் தலை வைத்து உறங்கும் காட்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். பிரதோஷ விழா இங்கு பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு இந்திய சுற்றுலாத் துறை மூலம் இரண்டு கோடியே 62 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவில் சுற்றுச்சுவர், மேல்நிலை குடிநீர் தொட்டி, பக்தர்கள் தங்கும் விடுதி ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலா தகவல் மையம் துவக்க விழா மற்றும் அன்னதான சத்திரம் ஆகியவை கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. கோவிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய வரும் முதல் 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில் சேர்மன் முனிசேகர் ரெட்டி தலைமை வகித்தார். செயல் அலுவலர் முனி கிருஷ்ணய்யா வரவேற்றார். சித்தூர் எம்.எல்.சி., ஜெயச்சந்திர நாயுடு, சத்தியவேடு எம்.எல்.ஏ., ஹேமலதா பணிகளை துவக்கி வைத்தனர். இதில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.