பதிவு செய்த நாள்
05
டிச
2017 
11:12
 
 கார்த்திகை, மார்கழி, தை மாதங்களுக்கும், ஆன்மிகத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கார்த்திகை முதல் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல விரதம், அடுத்ததாக மகர விளக்கு விரதம் என சபரிமலை விரத காலம் களை கட்டுகிறது. தை மாதம் (ஜன.,14) பொங்கல் பண்டிகை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசம் விழா என இம்மூன்று மாதங்களும் விரத காலங்களாகவும், ஐயப்பன், முருகனுக்கு உகந்த காலங்களாகவும் உள்ளது. ருத்ராட்சம், துளசி மாலை அணிந்து பக்தர்கள் விரதத்தை துவங்குகின்றனர். மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜை, அடுத்ததாக பழநி என தொடர்ந்து மூன்று விரதங்களையும் கடை பிடிக்கும் பக்தர்களும் உண்டு.
விபூதி, குங்குமம், சந்தனம்: விரத காலங்களில் வீடுதோறும் வாசனை திரவியங்கள் அலங்கரிக்கும். அதிகாலை எழுந்ததும் பக்தி பரவசமூட்டும் பாடல்கள் பின்னணியில் குளிர்ந்த நீரில் குளித்து, நெற்றியில் விபூதி இட்டு, சந்தனம், குங்குமம் வைத்து காவி ஆடைகளை உடுத்தி, ஜவ்வாது மணக்க சுவாமி தரிசனம் செய்யும்போது கிடைக்கும் மன அமைதி வேறெதிலும் இருக்காது. விரதமிருக்கும் பக்தர்கள் அணியும் துளசி மாலைகளை தயாரிப்பதில் நரிக்குறவர்கள் கை தேர்ந்தவர்கள். கம்ப்யூட்டர் சாம்பிராணி, சந்தனம், சூடம், சுவாமி கயிறுகள் என ஆன்மிகம் சம்பந்தமான பொருட்கள், வாசனை திரவியங்களை இரவு, பகலாக தயாரிப்போர் மதுரையில் ஏராளம். குடிசை தொழிலான இதில் மட்டும் நேரடியாக 20 ஆயிரம் பேரும், மறைமுகமாக பல ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 
சந்தனம் மணக்கும் மதுரை: கீழ ஆவணி மூல வீதி மாலைக்கோனார் சந்தனக்கடை நிர்வாகி ஜெயச்சந்திரன்: நான்கு தலைமுறையாக சந்தனம் வியாபாரம் தான். தஞ்சாவூர், கும்பகோணத்தில் இருந்து சந்தனத்தின் மூலப்பொருள் கொள்முதல் செய்கிறோம். மூதாதையர் பின்பற்றிய தொழில் நேர்த்தியுடன் சந்தனம் தயாரிப்பதால் நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து கொண்டே செல்கிறது. சபரிமலை, பழநி முருகன் சீசன் காலம் துவங்கி விட்டால் ஆன்மிகத்துடன் இரண்டற கலந்து சந்தனம் தயாரிப்பதில் பேரானந்தம் கிடைக்கிறது. சந்தனத்தை மூடி வைக்காமல் திறந்து வைத்தால் நிறமும், மணமும் குறையாது. கெட்டியான சந்தனத்தில் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து பூசி கொள்ளலாம், என்றார்.
பைன் மரத்தின் கற்பூரம்: கீழ மாரட் வீதி சோமசுந்தரம்: கற்பூரத்தின் மூலப்பொருள் இமாச்சல பிரதேசம் பைன் மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு குறைந்தளவு மட்டுமே மூலப்பொருள் கிடைக்கிறது. எனவே சீனா, இந்தோனேசியாவை நம்பி தொழில் செய்கிறோம். இந்நாடுகளில் இருந்து பைன் மரத்தில் இருந்து மூலப்பொருள் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் விலை அதிகம். மெழுகு கலப்படத்தில் சிலர்சூடம் தயாரிக்கின்றனர். அது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். கண், மூச்சு தொந்தரவு ஏற்படும். சுவாமி வழிபாட்டில் கற்பூரம் முதலிடத்தில் உள்ளது. எனவே ஒரிஜினல் மூலப்பொருளை பயன்படுத்தி கட்டி, வில்லை கற்பூரம் தயாரிக்கிறோம், என்றார். 
பாட்னா மலை சாம்பிராணி: கீழ மாரட் வீதி பூஜை பொருட்கள் வியாபாரி அமர்நாத்: கருவேல மரத்தின் கரிக்கட்டை, ஆஸ்துமா நோயை உண்டு பண்ணும் மோசமான வாசனை திரவியங்களை கொண்டு சிலர் சாம்பிராணி, பத்தி தயாரித்து மலிவு விலைக்கு விற்கின்றனர். இதை பயன்படுத்தினால் உடல் நலம் பாதிக்கும். பீகார் பாட்னா மலைகளில் இருந்து கிடைக்கும் சாம்பிராணியை கொள்முதல் செய்து கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் சாணத்தில் எருவாட்டி தயாரித்து, அதிலிருந்து கிடைக்கும் கரியை துாளாக்கி, பாட்னா சாம்பிராணி கலவையில் சாம்பிராணி வில்லை தயாரிக்கிறோம், என்றார். கோயில் நகரம், கூடல் மாநகர், துாங்கா நகரம், கடம்ப வனம் என மதுரைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. எனினும் ஆன்மிகமும், வழிபாடும் என மதுரைக்கே உரித்தான ஒன்று என்பது இதன் மூலம் நிரூபணமாகி வருகிறது. 
ருத்ராட்சம், துளசி மாலைகள்: சக்கிமங்கலம் சவுந்திரபாண்டியன் நகர் நரிக்குறவர் நல சங்கத்தலைவர் செல்வராணி: ஒரிஜினல் துளசி கட்டைகள், ருத்ராட்சம் கொட்டைகளை காசி, பனாரஸில் இருந்து வாரம் தோறும் கொள்முதல் செய்து ரயிலில் கொண்டு வருகிறோம். இங்குள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ருத்ராட்சம், துளசி மாலைகளை செம்புக்கம்பிகளில் கோர்த்து நேர்த்தியாக தயாரித்து மொத்தம், சில்லரை விலைக்கு விற்கிறோம். விரத காலங்களான கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் நரிக்குறவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எங்களில் மாலை அணிந்து விரதம் இருப்போர் சபரிமலை, பழநி சென்று வியாபாரம் செய்கிறோம், என்றார்.