பதிவு செய்த நாள்
05
டிச
2017
12:12
குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மூன்றாம் சோமவார பூஜையில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை அருகே, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரத்தின கிரீஸ்வர் மலைக்கோவிலில், கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சோமவார பூஜை விமரிசையாக நடக்கிறது. இதன் படி, நேற்று மூன்றாவது சோமவார பூஜை நடந்தது. அதிகாலையில் இருந்தே கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள், 1,017 படிகள் கொண்ட மலை மீது ஏறி, சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி, நாமக்கல். திண்டுக்கல், சேலம் உட்பட பல மாவட்டங்களிலிருந்து, கோவில் குடிபாட்டுக்காரர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், பொன்னிடும் பாறையில் கால் அடி வைத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும், அப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை தேர் மீதும், பொன்னிடும் பாறையிலும் கொட்டினர். குளித்தலை இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், மல்லிகா தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.