காஞ்சிபுரம் : அய்யங்கார்குளம் சஞ்சீவராயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் பகுதியில் பழமையான சஞ்சீவராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். விழாவில் நேற்று காலை, 8:30 மணிக்கு கோதண்டராமர், சீதா பிராட்டி, லட்சுமணருக்கு திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து, மூலவர் சஞ்சீவராயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு, பகல், 12:40 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் காலையில் இருந்து பஜனை பாடல்கள் பாடினர்.