சபரிமலையில் பக்தர்களுக்கு உதவ 40 வனத்துறை ஊழியர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2017 03:12
சபரிமலை: சபரிமலையில் வரும் பக்தர்களுக்கு உதவ பம்பை மற்றும் சன்னிதானத்தில் 40 வனத்துறை ஊழியர்கள் 24 மணி நேர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடப்பு சீசனில் பம்பை மற்றும் சன்னிதானத்தில் இரண்டு வன கட்டுப்பாடு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் தலா 20 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நடை திறந்த நாள் முதல் 19 நல்ல பாம்புகள் உட்பட 116 கொடிய விஷ பாம்புகளை பிடித்து காட்டின் உட்பகுதியில் விட்டுள்ளனர். வண்டிபெரியாரை சேர்ந்த கோபி என்பவர் பாம்புகளை பிடிப்பதில் வனத்துறை ஊழியர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார்.சன்னிதானம் அருகே உரக்குழி, வோட்டன்பிலாவு, கழுதைக்குழி ஆகிய இடங்களில் வந்த காட்டு யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டியுள்ளனர். பக்தர்கள் பாதையில் வனவிலங்குகள் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக வன ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர்.
பம்பையில் மாற்றம் : பம்பையில் ஆடைகளை வீசக்கூடாது, சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்று பத்தணந்திட்டை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு பிரசாரம் நல்ல பலனை தந்துள்ளது. தண்ணீருக்குள் ஆடைகள் வீசுவது குறைந்துள்ளது. இதற்காக இங்கு அமைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் ஆடைகளை போட்டு செல்கிறனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பம்பை துாய்மையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.