பதிவு செய்த நாள்
21
டிச
2017
12:12
ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு புஷ்கலாதேவி தர்ம சாஸ்தா கோயிலில் டிச.,25ல் திருக்கல்யாணம் நடக்கிறது.உலக நன்மைக்காக ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலின் புராதன நம்பிக்கைகளையும், அது தொடர்பான சம்பிரதாயங்களை நிலை நிறுத்தும் பொருட்டும் ஆரியங்காவு தர்மசாஸ்தா சுவாமிக்கும், புஷ்கலா தேவிக்கும் ஜோதிரூப தரிசனம், நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், மண்டலாபிஷேகம் ஆண்டுதோறும் நடக்கிறது.தர்ம சாஸ்தா, சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த புஷ்கலா தேவியை மணந்து கொண்டுள்ளார். இதனால் திருவாங்கூர் மன்னர், தேவசம் போர்டார், சவுராஷ்டிரா மக்களை சம்பந்தி முறையில் அழைப்பிதழ் அனுப்பி கவுரவிக்கின்றனர். சவுராஷ்டிரா சமூகத்தினர், ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி சம்பந்தி உறவு முறையில் திருக்கல்யாண உற்ஸவத்தில் பங்கேற்று விழாவை நடத்தி வருகின்றனர்.
ஜோதி ரூப அம்மன் : கேரள மாநிலம் மாம்பழத்துறையில் டிச., 23ல் ஜோதி ரூப தரிசனம் நடக்கிறது. அதிகாலை 5:30 மணிக்கு நடை திறந்து சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு ஆரியங்காவு மக்கள், ஜோதிக்கு வரவேற்பு அளிக்கின்றனர். இரவு 9:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
மாப்பிள்ளை அழைப்பு : ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோயிலில் டிச.,௨௪ல் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம் இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்படும். மதியம் 12:00 மணிக்கு சந்தன அபிஷேகம், மதியம் 12:30 மணிக்கு சம்பந்தி விருந்து, மாலை 4:00 மணிக்கு தாலப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடக்கிறது.
திருக்கல்யாணம் : டிச.,25ல் தர்மசாஸ்தா, புஷ்கலாதேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு நடை திறந்து அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேகம், காலை 9:00 மணிக்கு வஸ்திரங்கள் சாத்துப்படி, மதியம் 12:00 மணிக்கு சம்பந்தி விருந்து, இரவு 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. டிச.,26ல் மதியம் 2:00 மணிக்கு சர்வராஜ அலங்காரம், தீபாராதனையுடன் மண்டலபூஜை நிறைவுஅடைகிறது. ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்சம் போர்டு, ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை செய்து வருகிறது.