பதிவு செய்த நாள்
21
டிச
2017
01:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், 29ம் தேதி, வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடக்கவுள்ளது. அன்று அதிகாலை, 5:00 மணிக்கு, பரமபத வாசல் திறக்கப்பட உள்ளதால், பக்தர்கள் நெரிசலை தவிர்க்க சிறப்பு வழி ஏற்படுத்த, வலியுறுத்தப்படுகிறது. அரிய சிற்பங்கள் காஞ்சிபுரத்தில் ஏராளமான வைணவ தலங்கள் உள்ளன. இருப்பினும், வைகுண்ட ஏகாதசி விழா, வைகுண்ட பெருமாள் மற்றும் அஷ்டபுஜப் பெருமாள் கோவில்களில் மட்டுமே, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இந்த இரு ஸ்தலங்களும் ஆழ்வார்களால் பாடல் பெற்றவை. வைகுண்ட பெருமாள் கோவில், தொல்லியல் துறை பராமரிப்பிலும், அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. காஞ்சிபுரத்தில் அமைந்து உள்ள பழமையான வைணவ கோவிலான இங்கு, நுாற்றுக்கணக்கான அரிய சிற்பங்கள் உள்ளன. மேலும், இத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், நின்ற கோலம், சயன கோலம், அமர்ந்த கோலம் ஆகிய மூன்று நிலைகளில், பெருமாள் அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும், சயன கோலத்தில் உள்ள பெருமாளை தரிசிக்க முடியும்.
சிறப்பு அனுமதி: இதற்காக, அன்று அதிகாலை முதல் இரவு வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்வர்.
வைகுண்ட ஏகாதசி அன்று, சிறப்பு தரிசனத்திற்கான, ’பாஸ்’ கடந்த ஆண்டு வழங்கவில்லை. இதனால், பல பிரச்னைகள் ஏற்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அவை நிறுத்தப்பட்டன. அதே போல், இந்த ஆண்டும் சிறப்பு அனுமதி யாருக்கும் வழங்க கூடாது என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
தொல்லியல் துறை: சுவாமி தரிசனம் முடிந்த பின், வெளியில் வரும் பக்தர்களுக்கு தனி வழி ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். ஒரே வழியை பயன்படுத்துவதால் நெருக்கடி ஏற்படுகிறது.குளத்தை ஒட்டியுள்ள வழியை, பக்தர்கள் வெளியில் செல்ல பயன்படுத்த, கோவில் நிர்வாகம், தொல்லியல் துறை ஏற்படுத்தி தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அன்று காலை, 7:30 மணிக்கு பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.