பதிவு செய்த நாள்
17
டிச
2011
11:12
இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர் இனத்தை சார்ந்தவர்கள். கடற்கரையில் இவர்களை சந்தித்த இயேசு, "என் பின்னால் வாருங்கள் என்று கூறியவுடன் எதைப்பற்றியும் யோசிக்காமல், தங்கள் வலைகளையும், படகுகளையும், குடும்பத்தினரையும் துறந்து பின்தொடர்ந்தனர். இயேசு, இவர்களை அழைத்த போது கூறிய அருள் வார்த்தையானது மறைபரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அச்சாரமாக அமைந்துள்ளது. "இன்று முதல், மனிதரை பிடிப்பவர்களாக உங்களை மாற்றுவேன் என்ற இறைவார்த்தையை மனதிற்கொண்டுதான் ஒவ்வொரு துறவியும் தங்கள் ஆன்மிக பயணத்தை அமைத்துக் கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவரே, தன்னிகரில்லாத தளபதியாக திகழ்ந்து வேதசாட்சியாக மறைந்த தேவசகாயம் பிள்ளை. கன்னியாகுமரியின் நட்டாலத்தில் பிறந்த நீலகண்ட பிள்ளை, மன்னர் மார்த்தாண்டவர்மாவின் வலதுகரமாக செயல்பட்டார். குளச்சல் துறைமுகத்தை கைப்பற்றுவதற்காக படையெடுத்து வந்த ஆங்கிலேய டச்சு படைகளை சிதறடித்து, அவர்களின் பாதுகாவலன் தே லன்னாய்யை சிறையில் அடைத்தார்.
நீலகண்ட பிள்ளையிடம் நட்புறவை வளர்த்துக்கொண்ட தே லன்னாய், இயேசுவைப்பற்றியும், அவரின் போதனைகளை பேசுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார். இயேசுவின் போதனையால் கவரப்பட்ட பிள்ளை, ஞானஸ்நானம் பெற்றதோடு தனது பெயரை தேவசகாயம் பிள்ளை என்று மாற்றிக் கொண்டார். மற்றவர்கள் மத்தியில் இயேசுவை பற்றி பேசத்துவங்கினார். தளபதியின் மாற்றம் கண்டு வருந்திய மார்த்தாண்ட வர்மா, பலமுறை கண்டித்தும் திருந்தாததால் அவருக்கு மரணதண்டனை விதித்தார். ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் முழந்தாளிட்டு நின்ற நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்தவுடன், காற்றாடி மலையின் பாறை வெடித்து சிதறி அதிலிருந்து மணியோசை எழுந்து, அவர் உயிர் நீத்ததை அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தது. அவரது ரத்தத்துளிகள் பட்ட மரத்தின் கிளை உடனடியாக துளிர்த்தது. அவர் முழந்தாளிட்ட பாறையில் அவரது கால்தடங்கள் பதிந்தன. அவர் இழுத்து செல்லப்பட்ட பாதையில் நீரூற்றுகள் தோன்றின. கொலைக்களமாக கருதப்பட்ட காற்றாடி மலை, வழிபாட்டு தலமாக மாறியது. ஒரு மனிதன் தன்னைப்பற்றி அறிவதாலோ, தனது திறமைகள் அனைத்தையும் வெளிக்கொணர்வதாலோ நிறைவடைவதில்லை. மாறாக, எப்போது பிறருக்கு உதவ முன்வருகிறானோ, அப்போதுதான் அவன் நிறைவுள்ளவனாகிறான். நம்முடைய நிறைவை உடையிலோ, உணவிலோ, பதவியிலோ, பணத்திலோ காணாது பிறர் அன்பில் காண்போம்.