ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது துயில் கொண்டுள்ள ரங்கநாதர் பற்றி, நடந்த கால்கள் நொந்தனவோ? என்று பாடுகிறார் திருமழிசையாழ்வார். பெருமாள் எப்போது நடந்தார், எப்போது கால்வலி ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை தங்களின் விளக்கவுரையில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர் எடுத்த இரண்டு அவதாரங்களில் வெகுதூரம் நடந்திருக்கிறார். ராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் சென்ற போது அவர் பாதுகை கூட இல்லாமல் நடந்தார். கிருஷ்ணராக அவதரித்தபோது பசுக்களை மேய்க்க பிருந்தாவனம் முழுவதும் சுற்றி அலைந்தார். பின் ஓய்வெடுக்கவே காவிரிக் கரையோரம் உள்ள ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கிறார் என்கின்றனர்.